போதிய வருவாய் இல்லாததன் காரணமாக பெரும்பாலான சுவிஸ் இளைஞர்கள் பெற்றோருடனே வசித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 20-க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் பெற்றோருடனே வசித்து வருவதாகவும், அதில் பெரும்பாலானோர் குடும்பத்திற்கு தேவையான பண உதவிகளை மேற்கொள்வதில்லை எனவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த ஆய்வுக்காக சுவிஸ் இளைஞர்களில் 1067 பேரிடம் நேர்முகம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 20-ல் இருந்து 29 வயது இளைஞர்களில் 27 சதவிகிதம் பேர் பெற்றோருடனே வாழ்ந்து வருகின்றனர்.
மட்டுமின்றி இதில் பெரும்பாலானவர்கள் உணவு அல்லது உறவிடத்திற்கான பண உதவிகள் எதுவும் குறித்த வயது இளைஞர்கள் அளிப்பதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
19 சதவிகித இளைஞர்கள் மாதம் 100- 300 பிராங்கு வரை பெற்றோரிடம் அளித்து வருவதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 68 சதவிகித இளைஞர்கள் தங்களுக்கு போதிய வருவாய் இல்லாத காரங்களால் மட்டுமே இன்னமும் பெற்றோருடன் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதிக வாடகை, கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் குடியிருப்பு உள்ளிட்டவைகளை முக்கிய காரணங்களாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி பயின்று வருவதால் தங்களிடம் போதிய பணப்புழக்கம் இல்லை எனவும், பெற்றோருடன் வசிப்பதால் வாடகை உள்ளிட்ட செலவினங்களை மிச்சப்படுத்தலாம் எனவும் இளைஞர்கள் கருதுகின்றனர்.
மட்டுமின்றி பெற்றோருடன் வசிப்பதால் உணவு மற்றும் துவைப்பது உள்ளிட்டவைகளில் தங்களின் பங்கு மிகவும் குறைவு எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 6 சதவிகித இளைஞர்கள் தாங்கள் பெற்றோருடனே வசிப்பதன் காரணம் குறித்து பகிர்ந்து கொண்டது சுவாரசியமானது. தற்போதுள்ள உயர் தர வாழ்க்கையை விட்டுவிட முடியாது என்பதாலையே பெற்றோருடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆய்வறிக்கை இவ்வாறு இருக்க, இளைஞர்கள் தங்களுடன் வசிப்பதை 67 சதவிகித பெற்றோர் ஆதரிப்பதாகவே தெரிய வந்துள்ளது. தங்களது பிள்ளைகள் உரிய காலம் வரும்போது மட்டும் பிரிந்து சென்றால் போதும் என பெரும்பாலான பெற்றோர்கள் கருதுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.