Thursday 11 May 2017

சுவிஸ் இளைஞர்கள் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லாததன் காரணம் இதுதான்

போதிய வருவாய் இல்லாததன் காரணமாக பெரும்பாலான சுவிஸ் இளைஞர்கள் பெற்றோருடனே வசித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 20-க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் பெற்றோருடனே வசித்து வருவதாகவும், அதில் பெரும்பாலானோர் குடும்பத்திற்கு தேவையான பண உதவிகளை மேற்கொள்வதில்லை எனவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த ஆய்வுக்காக சுவிஸ் இளைஞர்களில் 1067 பேரிடம் நேர்முகம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 20-ல் இருந்து 29 வயது இளைஞர்களில் 27 சதவிகிதம் பேர் பெற்றோருடனே வாழ்ந்து வருகின்றனர்.
மட்டுமின்றி இதில் பெரும்பாலானவர்கள் உணவு அல்லது உறவிடத்திற்கான பண உதவிகள் எதுவும் குறித்த வயது இளைஞர்கள் அளிப்பதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
19 சதவிகித இளைஞர்கள் மாதம் 100- 300 பிராங்கு வரை பெற்றோரிடம் அளித்து வருவதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 68 சதவிகித இளைஞர்கள் தங்களுக்கு போதிய வருவாய் இல்லாத காரங்களால் மட்டுமே இன்னமும் பெற்றோருடன் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதிக வாடகை, கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் குடியிருப்பு உள்ளிட்டவைகளை முக்கிய காரணங்களாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி பயின்று வருவதால் தங்களிடம் போதிய பணப்புழக்கம் இல்லை எனவும், பெற்றோருடன் வசிப்பதால் வாடகை உள்ளிட்ட செலவினங்களை மிச்சப்படுத்தலாம் எனவும் இளைஞர்கள் கருதுகின்றனர்.
மட்டுமின்றி பெற்றோருடன் வசிப்பதால் உணவு மற்றும் துவைப்பது உள்ளிட்டவைகளில் தங்களின் பங்கு மிகவும் குறைவு எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 6 சதவிகித இளைஞர்கள் தாங்கள் பெற்றோருடனே வசிப்பதன் காரணம் குறித்து பகிர்ந்து கொண்டது சுவாரசியமானது. தற்போதுள்ள உயர் தர வாழ்க்கையை விட்டுவிட முடியாது என்பதாலையே பெற்றோருடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆய்வறிக்கை இவ்வாறு இருக்க, இளைஞர்கள் தங்களுடன் வசிப்பதை 67 சதவிகித பெற்றோர் ஆதரிப்பதாகவே தெரிய வந்துள்ளது. தங்களது பிள்ளைகள் உரிய காலம் வரும்போது மட்டும் பிரிந்து சென்றால் போதும் என பெரும்பாலான பெற்றோர்கள் கருதுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மோடியின் விஜயம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாழ்வில் திருப்பு முனையாக அமையுமா?

கௌதம புத்தரினால் பரப்பப்பட்ட புத்த சமயத்தின் வெசாக்தினத்தையும் இந்தியாவின் பிரதமர் மோடியின் விஜயமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைய நல்லாட்சி அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஸ்கரா அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நல்லாட்சி அரசாங்கம் காணமல் போனோர் விடயத்தில் நல்லதோர் முடிவெடுக்க வேண்டிய இறுதி நேரம் இதுவாகும்.
விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவடைந்தபின் முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இராணுவத்துடன் கையளித்து இன்று வரையும் இருப்புத் தெரியாது 80வது நாட்களுக்கு மேலாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நியாயமான கோரிக்கைக்கு முடிவு எடுக்கவேண்டிய நேரம் இதுதான்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இறுதிக் கட்டத்தில் தமது போராட்டத்தை வேறு திசையை நோக்கி நகர்த்த வேண்டிய தேவையை ஆணித்தனமாக தெரிவித்திருந்தார்கள்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் உலக அரங்கில் அவப்பெயரையும் உலக நாடுகளின் ஐ.நாடுகள் சபையின் அவப்பெயருக்கும் உட்படாமல் ஜனாதிபதியோ பிரதம மந்திரியோ பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டிய இறுதிக் கட்டமாகும்.
காணாமல் போனோர் பிரச்சினை என்பது இலங்கை அரசிற்கு கடினமானது என்பது தெரிந்த உண்மைதான்.
என்றாலும் கூட பிரச்சினைகள் ஒருவரையறையை மீறி உடன் கையாளப்பட வேண்டும். இது இன்றியமையாத ஒன்றாகும்.
பலர் காணாமல் போனதும் இன்னும் பலர் மறைமுக முகாங்களிலும் இன்னும் சிலர் வேறுபல இடங்களிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்பது பலமுறை தெரிவிக்கப்பட்ட ஒன்றாகும்.
இது உரிய முறையில் கையாளப்படவேண்டும். சொந்த காணிகள் இல்லாத மக்களுக்கு காணிப்பத்திரம் கிடைக்க ஆவணம் செய்யப்படவேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

இந்திய பிரதமருக்கு இரவு விருந்துபசாரம் அளித்த ஜனாதிபதி! எதிர்கட்சித் தலைவர் பங்கேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துபார நிகழ்வில் இந்திய பிரதமர் கலந்துகொண்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை மாலை இலங்கை வந்தடைந்தார்.
பின்னர் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கங்காராம விகாரைக்கு விஜயம் செய்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்தை திறந்து வைத்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்ட இரவு விருந்துபசாரத்தில் மோடி கலந்து கொண்டார்.
இவ் விருந்துபசார நிகழ்வில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி இந்திய தூதுவர் தரண்ஜித்சிங் சந்து, இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர், ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.